சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனத்துக்குப் பிறகு, ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறையைத் திறந்துவைத்த அமைச்சர், பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு டி அண்ட்சி பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். மேலும், ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையையும் ஊழியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ஓட்டுநர், நடத்துநர் என 625 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். புதிய நியமனத்துக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். ஓரிரு வாரத்தில் விண்ணப்பங்கள் பெற்று, பணியாளர்கள் தேர்வு செய்யப் படுவர்.
இதுபோன்ற புதிய நியமனத்துக்குப் பிறகு, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 4,200 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதற்காக அடுத்தடுத்து டெண்டர் வெளியிடப்பட்டு வருகிறது.
4 மாதங்களுக்குள் புதிய பேருந்துகள் வாங்கப்படும்போது, 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும். சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து இயக்குவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.