சென்னை: சைதாப்பேட்டை தொகுதி, அடையாறு மண்டலம் வார்டு 169-க்குஉட்பட்ட அரசு பண்ணை மற்றும்ஜோதியம்மாள் நகர் பகுதிகளில்ரூ.6.58 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் உந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தனர்.
பின்னர், அண்ணா சாலையில் இருந்து இப்பகுதிகளுக்கு ரூ.49.77 லட்சத்தில் 350 மீட்டர் நீளத்துக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணியைதொடங்கி வைத்தனர். சைதாப்பேட்டை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில்ஜோதியம்மாள் நகரில் படிப்பகத்துடன் நூலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து, அமைச்சர்கள் பேசியதாவது:
கே.என்.நேரு: செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அடுத்த பேரூரில் 400 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அங்கு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. சென்னை மக்களுக்கு 800 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் 85 லட்சம்பேருக்கு 1,000 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 250 எம்எல்டி குடிநீர் வழங்குவதற்கான பணி முடியும் நிலையில் உள்ளது.
மா.சுப்பிரமணியன்: அரசு பண்ணை, ஜோதியம்மாள் நகர் பகுதிகளில் இருந்து கழிவுநீரை, அடையாறு ஆற்றில் கலக்காமல், தாடண்டர் நகர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல ரூ.6.58 கோடியில் 1,296 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அரசு பண்ணையில் சாலையோர கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜோதியம்மாள் நகரில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் அதுசார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்துகுழாய் 1,221 மீட்டர் நீளத்துக்கு பதிக்கப்பட்டுள்ளது என்றனர்.