தமிழகம்

தருமபுரி | காவிரியாற்றில் நீந்த முயன்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு: மது போதையால் விபரீதம்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காவிரியாற்றில் நீந்த முயன்ற தச்சுத் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் அன்னூர் வட்டம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சித்தப்பாஜி மகன் யோகி(33). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாலிங்கம்(39). தச்சுத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் பணிக்காக தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதிக்கு நேற்று (ஜூலை 12) வந்துள்ளனர். காவிரியாற்றின் மறுகரை வரை பேருந்தில் வந்த அவர்கள் இருவரும் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து நேற்று மாலை பரிசல் மூலம் ஒட்டனூர் நோக்கி பயணித்துள்ளனர்.

அவர்கள் பயணித்த பரிசல், ஒட்டனூர் பரிசல் துறை கரையை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ஆற்றில் நீச்சலடித்து கரைக்கு வருவதாகக் கூறி யோகி ஆற்றில் குதித்துள்ளார். அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, போதை காரணமாகவும் அவர் அணிந்திருந்த ஜுன்ஸ் பேண்ட் நீரில் நனைந்து பாரம் அதிகரித்ததாலும் அவரால் நீச்சலடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே, ஏரியூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் பென்னாகரம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அதே பகுதியின் மற்றொரு இடத்தில் யோகியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT