தமிழகம்

கோயில் காளை உயிரிழப்பு: ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்த தஞ்சை கிராமத்தினர்!

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: பூதலூர் வட்டம், செல்லப்பன்பேட்டையிலுள்ள முனியாண்டவர் கோயில் காளை திடீரென்று உயிரிழந்ததால், அந்தக் காளையை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மிகவும் பழமையான முனியாண்டவர் கோயிலுள்ளது. இக்கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 ஆண்டுகளாக காளைக் கன்றை இவர்களது பராமரிப்பில் வளர்த்து வந்தனர். இந்நிலையில், காலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோயில் காளை மாட்டுக்குத் தீவனம் வைத்து விட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் அந்த காளை திடீரென்று மயங்கி விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, இளைஞர்கள், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்த போது, அந்தக் காளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலையறிந்த கிராமத்தினர், அங்குத் திரண்ட பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து மாட்டின் உடலை தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தி, மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் மாட்டின் உடலைக் கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில் வளாகத்தில் அடக்கம் செய்தனர். இதனால் அந்தக் கிராமம் சோகத்தில் முழ்கியது

SCROLL FOR NEXT