தமிழகம்

டாஸ்மாக்கில் 90 மி.லி. அறிமுகம் செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம்: ராமதாஸ், டிடிவி தினகரன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரிப்பது, 90மி.லி. மது அறிமுகம் செய்வது ஆகிய திட்டங்களை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களது அறிக்கைகள்:

ராமதாஸ்: டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது விற்கப்பட்டால், அதன் விலை மிகவும் குறைவாகஇருக்கும். அதனால், பணம் இல்லாதவர்கள்கூட, குறைந்த தொகையை எளிதாக திரட்டி மதுவாங்கி குடிப்பார்கள். அதேபோல, காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறந்தால், வேலைக்கு செல்பவர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் முடங்கிவிடுவார்கள்.

தமிழகத்தில் முழு மது விலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபட கூடாது. 90 மி.லி. மதுவை அறிமுகம் செய்தாலோ, காலையிலேயே மதுக்கடைகளை திறந்தாலோ, அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

டிடிவி தினகரன்: ‘ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்’ என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையது அல்ல. மதுவை 90 மி.லி. பாக்கெட்டில் விற்பது, வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபான கடைகளை திறப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், பொதுமக்களை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

சமக தலைவர் ரா.சரத்குமார்: கட்டிட வேலை உள்ளிட்ட கடினவேலை செய்வோரைக் கருத்தில்கொண்டு காலை 7 முதல் 9 மணி வரை மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், குறைந்தபட்ச அளவாக90 மிலி அளவுக்கு மது விற்பனைசெய்ய உள்ளதாகவும் அமைச்சர்முத்துசாமி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிக்கிறது. மதுவால் ஏற்படும் குற்றச்செயல்கள் ஆகியவற்றை சிந்தித்திருந்தால் இந்தஎண்ணம் தோன்றியிருக்காது. இத்திட்டத்தை செயல்படுத்த முயன்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT