தமிழகம்

ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும்: செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரி்த்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகலா தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிடும்போது, ‘‘செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணம் வைத்திருப்பதாகவோ அல்லது மறைத்து வைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைதுசெய்ய முடியும். சட்டவிரோதப்பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்படி அமலாக்கத் துறை விசாரணை மட்டுமே நடத்த முடியும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படிதாக்கல் செய்ய முடியும்?’’ என்றார்.

அதற்கு கபில்சிபில், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மறுநாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுதாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை அதை ஏன் செய்யவில்லை?

ஒருவேளை அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் காரணமாகதங்களால் விசாரிக்க முடியவில்லை என்றால், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்துக்கு வந்து இருக்கலாமே? எனவே காவலில் எடுத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது எனக் கோர முடியாது. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதியளித்ததாக அமலாக்கத் துறை, அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் அமலாக்கத்துறை தனது அதிகார வரம்பை மீறி காவல்துறையினரின் அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி நிஷாபானு அளித்துள்ள தீர்ப்பு மிகச்சரியானது’’ எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்களை வழங்கியபோது அதை செந்தில் பாலாஜி ஏற்க மறுத்தது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார். மேலும் ‘‘ஒருவேளை கைது நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெறலாம்’’ என்றார்.

அதன்பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிடும்போது, ‘‘கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள பிறகு திருத்தப்பட்டுள்ளது. இது முறைகேடு. ஜூன் 13 அன்று தொடங்கிய சோதனை மறுநாள் வரை நீடித்துள்ளது. அதற்கு செந்தில் பாலாஜி முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வாக்குமூலமும் அளித்துள்ளார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒருவேளை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தால் அந்தக் காவலை திரும்ப வழங்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது. அந்த மனுவை எங்களுக்கும் தரவில்லை’’ என வாதிட்டார்.

இந்த வழக்கில் மேகலா தரப்பில் வாதங்கள் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.

அமலாக்கத்துறை கேவியட் மனு: இதற்கிடையே நேற்று விசாரணை தொடங்கிய நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘‘இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் அளிக்கவுள்ள தீர்ப்பின் சாதக, பாதகத்தைப் பொறுத்து செந்தில் பாலாஜி தரப்பு அவசர கதியில் உச்ச நீதிமன்றத்தை நாடினாலோ அல்லது வேறு ஏதேனும் இடையீட்டு மனு தாக்கல் செய்தாலோ அதில் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்’’ என கோரியுள்ளது.

SCROLL FOR NEXT