தமிழகம்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் 3 நாள் பயிலரங்கம்: சென்னையில் தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: மருந்து, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மூன்று நாள் பயிலரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) நிர்வாக நடவடிக்கைகளை நேரில் கள ஆய்வு செய்யும் வகையில் அந்த பயிலரங்கத்தின் நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவப் பிரதிநிதிகள், உலக சுகாதார நிறுவன நிர்வாகிகள் பயிலரங்கில் கலந்துகொண்டனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார இயக்குநர் மனோஜ் ஜலானி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். தொடர்ந்து பல்வேறு தலைப்பிலான அமர்வுகளில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர்.

தரமான மருத்துவ சேவை: இந்த பயிலரங்கில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் உள்ள மருந்து கிடங்குகளின் செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தரமான மருத்துவ சேவைக்கு மூன்று விஷயங்கள் முக்கியத் தூண்களாக உள்ளன. மருத்துவப் பணியாளர்கள், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சரியான தருணத்தில் விநியோகிக்கப்படும் மருத்துவப் பொருள்கள் ஆகியவை மூலம்தான் சிறந்த மருத்துவத்தை அளிக்க முடியும்.

1994-ல் தோற்றுவிப்பு: அந்த வகையில் மருத்துவப் பொருள்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள்கழகம் கடந்த 1994-ல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விநியோகிக்கப்படுவதுடன் 16 கதிர் வீச்சு மையங்களும், 9 லீனியர் ஆக்ஸலரேட்டர் எனப்படும் நவீன கதிர் வீச்சு சிகிச்சை மையங்களும், 11 டெலி கோபால்ட் சிகிச்சை மையங்களும், 39 எம்ஆர்ஐ மற்றும் 119 சிடி ஸ்கேன் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

மக்களின் நலன் காக்க மருத்துவக் காப்பீடு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் என பலதிட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT