தமிழகம்

அமித்ஷாவுக்கு விஜயகாந்த், வைகோ வாழ்த்து

செய்திப்பிரிவு

பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித்ஷாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்

பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவை சொந்த மாநிலத்திலும் அண்டை மாநிலங்களிலும் வளர்த்தெடுத்ததில் உங்களின் பங்கு அதிகமானது என்பதை அறிவேன். உங்களது கடினமான உழைப்பு மூலம் பாஜக புதிய வரலாறு படைக்கும் என நம்புகிறேன்.

வைகோ

பாஜகவின் தேசியத் தலைவராகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு எனது பாராட்டுக்கள். உங்களுடைய தெளிவான திட்டமிடுதல், தீவிரக் களப்பணிகளால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப்பெரும் வெற்றியை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவரான நீங்கள், பாஜகவுக்கு உந்து சக்தியாகவும் வலியதூணாகவும் திகழ்கிறீர்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்

சிறு வயது முதலே தேசப் பணியிலும், பாஜக சமூக நல இயக்கங்களிலும் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அமித்ஷா. தனது கடும் உழைப்பாலும் தன்னலமற்ற சேவையாலும் பாஜகவின் தேசியத் தலைவர் என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளார். குஜராத் மாநில வளர்ச்சியில் நரேந்திர மோடிக்கு உறுதுணையாக இருந்தவர். அவருக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SCROLL FOR NEXT