மதுரை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடுகல் கண்காட்சி தொடங்கியது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, அரசு அருங்காட்சியகம் சார்பில், கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, மதுரையில் அரசு அருங்காட்சியகம் சார்பில் நடுகற்கள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 24-ம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில், தமிழகத்தில் கிடைத்த கி.மு. 3, 4-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த புலிமான்கோம்பை, தாதப்பட்டி, நெகனூர்பட்டி தமிழி நடுகற்கள், தமிழி மற்றும் வட்டெழுத்து கலந்து எழுதப்பட்ட நடுகற்கள், வட்டெழுத்தில் அமைந்த நடுகற்கள், முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு பிடித்தமான நடுகல் உள்ளிட்ட 65 நடுகற்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிடித்த நடுகல் எதுவென்று சரியாக எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் முதல் 3 பேருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் கூறினார்.