சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அவரது அறிவுரையின்பேரில், 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்தவும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் பேசியதாவது: சில மளிகைப் பொருட்கள், காய்கறிகளின் கடந்த சில வார விலைநிலவரத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு துறை சார்பில், தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகள், நியாயவிலை கடைகளில் சந்தையைவிட குறைந்த விலையில்காய்கறி மற்றும் குறிப்பிட்ட வகைமளிகை பொருட்கள் கிடைக்க பல்வேறு துறைகளின் அலுவலர்களும் ஏற்பாடு செய்யவேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகம் (டிஎன்சிஎஸ்சி), கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யலாம்.
அதேநேரம், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர் சந்தைகளில் காய்கறிவிற்பனையை அதிகப்படுத்த அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும். கரோனா காலத்தில் செயல்பட்டதுபோல நடமாடும் காய்கறி அங்காடிகளை மாநகராட்சிகள், தோட்டக்கலை துறை மூலம்தொடங்க வேண்டும். இவ்வாறுமுதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு, உணவு துறை அதிகாரிகள் கூறியதாவது: பண்ணை பசுமை அங்காடிகள் மூலமாக கூடுதலாக தக்காளி,சின்ன வெங்காயம் கொள்முதல்செய்யப்பட்டு விற்கப்படும். கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை சந்தையைவிட குறைவான விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும். நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளைஅதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு இருப்பு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு, பதுக்கல் செய்வோர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, உணவுத் துறை செயலர்ஜகந்நாதன், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமன், வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையன், வேளாண் விற்பனை இயக்குநர் நடராஜன், டிஎன்சிஎஸ்சி மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஐ.ஜி. காமினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.