தமிழகம்

கிராமப்புறங்களில் உள்ள 2,500 கோயில் திருப்பணிக்கு ரூ.50 கோடி - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள 1,250 கோயில்கள், கிராமப்புறத்தில் உள்ள 1,250 கோயில்கள் என மொத்தம் 2,500 கோயில்களின் திருப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள 1,000 கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கெனவே தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 1,250 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்படும்.

இதேபோல, கிராமப்புற கோயில் திருப்பணி திட்டத்தின்படி 1,000 கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கெனவே தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டு முதல் 1,250 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்படும்” என்றுகடந்த 2021-22-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதை நிறைவேற்றும் வகையில், கடந்த ஜன.5-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த நிகழ்வில், மொத்தம் 2,500 கோயில்களின் திருப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்கள், கிராமப்புறத்தில் உள்ள 1,250 கோயில்கள் என 2022-23-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகளை அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள், பூசாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் க.மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளி தரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT