சென்னை: ரூ.236 கோடியில் 4.89 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் தமிழக அரசின்பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒவ்வொருகல்வியாண்டும் இலவசமாக மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் (2022-23) பிளஸ்-1 படித்தஅரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா சென்னை, திருவல்லிக்கேணி என்.கே.டி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்து கொண்டு, ரூ.235.92 கோடி மதிப்பீட்டில், 4 லட்சத்து 89,600 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அடையாளமாக 10 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகளை நேரடியாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இதனை இலவசமாக பார்க்காமல்கற்ற கல்விக்கு உரிமையாக பார்க்கவேண்டும். கல்வியை மட்டும்தான் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்களுக்கு ஒரு தாயாகவும், தந்தையாகவும் பார்த்துக் கொள்ள தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்” என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் இலவசமாக பெறும் மிதிவண்டிகளை மாணவ, மாணவியர் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் 80 சதவீதம் பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறியிருந்தனர். ஆனால்ரூ.15 ஆவது கொடுத்தார்களா? அவர்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்து பேச அருகதை இல்லை” என்றார்.
இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவீன மீன் அங்காடி: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 62-வது வார்டு, சிந்தாதிரிப்பேட்டையில் சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதனநிதியின் கீழ் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன் அங்காடி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த சந்தை வளாகம் 1,247 சமீ பரப்பளவு கொண்டது. அவற்றில் 102 கடைகளுடன் கூடிய நவீன மீன் அங்காடிகள் அமைய உள்ளன. இந்தக் கட்டிடம், புயலால் சேதமடையாமல் இருக்கும்வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வாகன நிறுத்தம் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட உள்ளது.