தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை - நீதிமன்றத்தில் அனுமதி கோரிய சிபிசிஐடி போலீஸார்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் 4 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அனுமதி கோரிய நிலையில், அவர்களை பெற்றோருடன் நாளை (ஜூலை 12) ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், இதுவரை காவலர் ஒருவர் உட்பட 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவர்கள் 4 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி, மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை 2 நாட்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி எஸ்.ஜெயந்தி, நாளை (ஜூலை 12) பெற்றோருடன் அச்சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

எனவே, சிறுவர்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவு தெரியவரும். இந்த வழக்கில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் முறையாக சிறுவர்கள் 4 பேரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT