இருளில் மிதக்கும் வண்டலூர் ரயில்வே மேம்பாலம் 
தமிழகம்

அந்திவரும் நேரம் | இருளில் மூழ்கும் வண்டலூர் பாலம்: ஒளிராத மின்விளக்கு; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை

பெ.ஜேம்ஸ்குமார்

வண்டலூர்: வண்டலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல், இருளில் மூழ்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பாலத்தில் பயணம் செய்ய தயங்குகின்றனர். பிரச்சினை குறித்து அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் ஏதும் செய்யாமல் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை மீது குற்றாட்டு எழுந்துள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு, ஜிஎஸ்டி சாலையில் இருந்து, வாலாஜாபாத் சாலை பிரியும் இடத்தில் உள்ள வண்டலூர் ரயில்வே கேட்பகுதியில், ரூ. 17 கோடி செலவில், ஜிஎஸ்டி - வண்டலூர், வாலாஜாபாத் சாலைகளை இணைக்கும் வகையில், 1.4 கி.மீ. நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

மேலும், மேம்பாலத்துக்கு மேலே இரவைப் பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால், மேம்பாலம் திறந்த புதிதில் இரவு நேரம் பகல்போல ஜொலித்தது. வாகனங்களும் இரவில் சகஜமாக சென்று வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாலத்தின் மேல் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரத்தில் பாலத்தில் சென்று வர வாகன ஓட்டிகள் தயங்குகின்றனர்.

மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்களை இலகுவாக ஓட்டிச் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் மேம்பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனவே, மேம்பாலத்தில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சரிசெய்து, இரவில் பொதுமக்கள் சகஜமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இருட்டை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து நடக்கின்றன. பிரச்சினைகளை தவிர்க்க சர்வீஸ் சாலை மற்றும் பாலத்தில் இரவில் அடிக்கடி போலீஸார் ரோந்து சென்று, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வண்டலூரை சேர்ந்த சமூக ஆர்வலர், அ.ராஜ்குமார் கூறியதாவது: வண்டலூர் மேம்பாலத்தில், பல மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாலத்தின் மேல் உள்ள விளக்குகள் எரியாமல் இருப்பதால் பாலத்தின் மீது மட்டுமின்றி, சர்வீஸ் சாலையிலும் வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது.

வாகன ஓட்டிகள் மேம்பாலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பயமின்றி இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு, பாலத்தின் மேல் உள்ள மின்விளக்குகளை ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி கூறியதாவது: வண்டலூர் மேம்பாலம் பல மாதங்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. ஊராட்சி மன்ற கூட்டத்திலும், கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து குறைகளை முன் வைத்தோம். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், அமைச்சர் அன்பரசனிடம் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் குறைதீர் முகாமில், மேம்பால பிரச்சினை தொடர்பாக புகார் அளித்தோம்.

அமைச்சர் நேரடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை அழைத்து, உடனடியாக மின்விளக்கு அமைக்க அறிவுத்தினார். அப்பொழுது சரிசெய்வதாக உறுதி அளித்த நெடுஞ்சாலைத்துறையினர், அதன் பிறகு மின்விளக்கு சீர் செய்யும் பணியை மேற்கொள்ளவே இல்லை.

அனைத்து தரப்பினரும் மனு கொடுத்து ஓய்ந்து விட்டோம். மீண்டும் அமைச்சரிடம், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை ௭டுக்க கோரி மனு கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT