சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த 30-ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருணும், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர், ஆவடி காவல் ஆணையராக சங்கர் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், சரக ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சொத்து தொடர்பான குற்றங்கள், குடும்ப வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுப்பது, காவல்துறையினரின் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.