தமிழகம்

ஜாபர்கான்பேட்டை மயானத்தை ரூ.2.57 கோடி செலவில் நவீனப்படுத்தும் பணி: சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ஜாபர்கான்பேட்டை மயானத்தை ரூ.2.57கோடி செலவில் நவீனப்படுத்தும் பணியைமேயர் ஆர்.பிரியா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 209 மயானங்கள் உள்ளன. இந்த மயானங்களின் நுழைவு வாயில் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க வரும் பொதுமக்கள் அமரும் வகையில்இருக்கைகளை அமைக்க வேண்டும்.கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும். மரக்கன்றுகள் நடுதல்,நீரூற்றுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம் 139-வது வார்டு ஜாபர்கான்பேட்டையில் உள்ள பழுதடைந்த மயானபூமி கட்டிடத்தை இடித்துவிட்டு, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக எரிவாயு மூலம் இயக்கப்படும் 2 தகன மேடை கொண்ட நவீன மயானபூமி அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் மேயர் பிரியா பங்கேற்று, கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய வட்டார துணைஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான்., கோடம்பாக்கம் மண்டலத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ப.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT