சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.2,400 கோடியில் புதிதாக 15,000 குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னை ஆயிரம்விளக்கு, டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் ரூ.134.26 கோடியில் 770 குடியிருப்புகள் கட்டும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாக்டர் தாமஸ் சாலை திட்டப் பகுதியில் 35 ஆண்டு பழமையான 300 குடியிருப்புகளை இடித்துவிட்டு, ரூ.77.74 கோடியில் 470 புதிய குடியிருப்புகளும், சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் 45 ஆண்டு பழமையான 256 குடியிருப்புகளை இடித்துவிட்டு, ரூ.56.52 கோடியில் 300 புதிய குடியிருப்புகளும் மறுகட்டுமான திட்டத்தின்கீழ் கட்டப்படுகின்றன. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு, குடியிருந்தவர்களிடமே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ததில், சென்னையில் 27,038, மாநிலத்தின் இதர நகரங்களில் 3,354 என 30,392 குடியிருப்புகள் சிதிலமடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. முதல்வர் உத்தரவுப்படி, இந்த குடியிருப்பு பகுதிகளில் ரூ.2,400 கோடியில் 15,000 புதிய குடியிருப்புகள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் முதல்கட்டமாக, சென்னையில் 10 திட்டப் பகுதிகளில் உள்ள 3,934 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. 11 திட்டப் பகுதியில் 2,258 குடியிருப்புகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது. 20 திட்டப் பகுதிகளில் 7,175 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்கும். 19 திட்டப் பகுதிகளில் 6,805 குடியிருப்புகளை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டுமானப் பணி நடக்க உள்ளதால், மிக குறுகிய காலத்தில் கட்டிடங்கள் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர், ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு உடன் இருந்தனர்.