மதுரை: மதுரையில் ஜூலை 15-ம் தேதி திறப்பு விழா காணும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அருகே இருந்த 50-க்கும் மேற்பட்ட பழைய வீட்டு வசதி வாரிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
மதுரை புது நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக பல ஆயிரம் பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. கட்டுமானப் பணிகள் இன்றுடன் நிறைவடைவதால், நாளை நூலகத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
திறப்பு விழா முடியும் வரையில் போலீஸ் பாதுகாப்புடன் மற்ற பணிகள் நடக்க உள்ளன. இந்த நிலையில் நூலக கட்டிடத்தின் தென் திசையில் அரசு மருத்துவமனை டீன் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு, அரசு ஊழியர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இதில் கலைஞர் நூலகத்தின் தெற்குப் பகுதி சுற்றுச்சுவர் அருகே 3 தளங்களுடன் கூடிய 50-க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருக்க முடியாத அளவுக்கு பழமையாகி விட்டன. சில மாதங்களுக்கு முன்பே இந்த வீடுகளில் வசித்தோர் அனைவரையும் காலி செய்ய வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதனால் காலியாக இருந்த இந்த கட்டிடம் நூலகத்தின் அருகே பாதுகாப்பற்ற முறையில் இருந்தது.
நூலகம் திறப்பு விழாவுக்கு முன்னரே அருகேயிருந்த பழைய வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினால் தான் நூலகத்தின் அழகும், அமைப்பும் பிரம்மாண்டமாக இருக்கும் என அதிகாரிகள் கருதினர். மேலும் முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் பாதுகாப்பு கருதியும் பழைய வீடுகளை இடிக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக நடந்துவந்த கட்டிடங்களை அகற்றும் பணி நேற்று நிறைவடைந்தது.