தமிழகம்

மின் வாரியத்தில் 5 இயக்குநர்கள் உட்பட 25,000 பணியிடங்கள் காலி: கூடுதல் வேலை பளுவால் நுகர்வோருக்கான சேவைகள் பாதிப்பு

ஹெச்.ஷேக் மைதீன்

தமிழக மின் வாரியத்தில் திட்டங்கள், உற்பத்தி உள்ளிட்ட பிரிவுகளுக்கான 5 இயக்குநர்கள் மற்றும் கம்பியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் நுகர்வோருக்கான சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக மின் வாரியம் மத்திய அரசின் உத்தரவுப்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் என இரு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் மின் வாரிய தலைவர் தலைமையில் இயங்கி வருகின்றன. இரு துணை நிறுவனங்களுக்கும் தனியாக இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் முக்கிய அதிகாரிகள் மின் வாரிய உறுப்பினர்களாக இடம் பெற்று, முக்கிய முடிவுகளை எடுப்பர்.

இந்நிலையில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உற்பத்திப் பிரிவு இயக்குநராக இருந்த பொறியாளர் சங்கர் கடந்த ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். அவரது பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்தப் பிரிவுக்கு மின் பகிர்மானக் கழக பகிர்மானப் பிரிவு இயக்குநர் அண்ணாதுரை கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திட்டங்கள் பிரிவுக்கான இயக்குநர் பணியிடமும், சுமார் மூன்றாண்டுகளாக காலியாக உள்ளது. திட்டங்களையும் தற்போது மின் பகிர்மான இயக்குநரே கவனித்து வருகிறார்.

மின் தொடரமைப்புக் கழக இயக்குநராக இருந்த பொறியாளர் அக்‌ஷய்குமார், கடந்த மே மாதத்துடன் ஓய்வு பெற்றார். அவர் தற்போது தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் பணியிடமும் தற்போது காலியாகவே உள்ளது.

இதேபோல் மின் தொடரமைப்புக் கழக மேலாண் இயக்குநர் பதவியும் சுமார் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது. இப்பதவியில் பணியாற்றிய முருகன் மீது, மின் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டதால் இந்தப் பணியிடம் காலியாகவே உள்ளது.

இதுமட்டுமின்றி, மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு முக்கிய பங்காற்றும் மின் பகிர்வு மையத்தின் இயக்குநர் விஸ்வநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். இந்தப் பணிகளை மின் பகிர்வு மைய தலைமைப் பொறியாளர் கலியபெருமாள் கூடுதலாக கவனித்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி, 5 இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மின் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டுமே மின்வாரிய நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலை உள்ளதாக தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல், நுகர்வோருக்கான அடிப்படை மின் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் கம்பியாளர், கள உதவியாளர் மற்றும் கணக்கீட்டாளர் பணியிடங்

கள் என 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. எனவே உயரதிகாரிகள் பணியிடங்கள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது:

காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மின் வாரியத்தில் மெத்தனப் போக்கு நிலவுகிறது. இதனால், மற்ற பணியாளர்கள் கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதுடன், நுகர்வோருக்கு தேவையான சேவைகளை செய்வதிலும் சுணக்கம் ஏற்படும்.

தற்போதைய நிலவரப்படி 5 இயக்குநர் பணியிடங்கள் மட்டுமின்றி, 13 ஆயிரம் கம்பியாளர் (வயர்மேன்), 11 ஆயிரம் கள உதவியாளர் (ஹெல்ப்பர்) பணியிடங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்கீட்டாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதை நிரப்ப மின் வாரியத்துக்கும், அரசுக்கும் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT