சேலம்: சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் சிலர் காலையில் வருகையை பதிவு செய்து விட்டு, பணிக்கு வராமல் செல்வதால், ஒரு டிராக்டரில் ஒரு தொழிலாளியை கொண்டு பணி மேற்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்களில் தினமும் 600 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. மாநகராட்சியில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தனியார் வசம் தூய்மைப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூய்மைப் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலையால், பல இடங்களில் முக்கிய வீதிகளில் குப்பைகள் தேக்கமடைந்து, சுகாதார சீர்கேடுக்கு வித்திட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களில் சிலர் மண்டல அலுவலகங்களுக்கு காலையில் சென்று வருகையை பதிவு செய்து விட்டு, பணிக்கு வராமல் வீடுகளுக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சுய உதவி குழுவைச் சேர்ந்த தற்காலிக பணியாளர்களை கொண்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு டிராக்டரில் ஒரே ஒரு பணியாளரை மட்டும் வைத்துக் கொண்டு, வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை சேகரிக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் இரண்டுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டால் பணி விரைந்து முடிக்கப்படும். ஒரே பணியாளர் குப்பையை சேகரிப்பதால் ஓயாமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் பணிச் சுமையால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூய்மைப் பணியை மேற்பார்வையிடும் மேஸ்திரிகள், பணிக்கு வராத தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் இருக்க மாதம் தோறும் சிறப்பாக ‘கவனிக்கப்படுவதாக’ புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற குறைபாடுகளை மாநகர நல அலுவலர் கண்காணித்து, பணிக்கு வராமல் உள்ள தொழிலாளர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மட்டுமே மாநகரம் சுகாதார சீர்கேடின்றி சுத்தமாக இருக்கும், என்றனர்.
பயோமெட்ரிக் முறை: இதுகுறித்து மாநகர நல அலுவலர் மருத்துவர் யோகானந்த் கூறியது: சேலம் மாநகராட்சியில் சில தூய்மைப் பணியாளர்கள் வருகையை பதிவிட்டு, பணிக்கு வராமல் செல்கிறார்களா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அப்படியும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற தவறுகள் நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துப்புரவு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் வாகனங்கள் செல்லும் நேரம், செல்லும் இடங்களை கண்காணிக்க வசதியாக இருக்கும். ஜிபிஎஸ் கருவி வாகனங்களில் பொருத்தியதும், அதே வாகனத்தில் பயோ மெட்ரிக் முறையில் தூய்மைப் பணியாளர்கள் வருகையை கைரேகை கொண்டு பதிவு செய்திடும் முறை அமல்படுத்தப்படும். இதன் மூலம் தூய்மைப் பணியாளர்கள் காலை, மதியம் இரண்டு நேரமும் பயோ மெட்ரிக் வருகை பதிவின் கீழ் கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.