மாணவர்களுடன் உரையாடிய மேயர் பிரியா 
தமிழகம்

திமுக கடைப்பிடிக்கும் சமூக நீதிக் கொள்கையே மாமன்னன் திரைப்படம்: சென்னை மேயர் பிரியா

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: திமுக கடைபிடிக்கும் சமூக நீதிக் கொள்கையே மாமன்னன் திரைப்படம் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

2023-24ஆம் நிதியாண்டிற்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையின்போது, மேயர் உரையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், 11ம் வகுப்பு பயிலும் சுமார் 5200 மாணவர்களை பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலைகள், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள், தக்‌ஷினா சித்ரா அருங்காட்சியகம் போன்ற இடங்களைப் பார்வையிட ஜுலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதங்களில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக, டி.எச். சாலை சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 270 மாணவர்கள், பட்டேல் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள், கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 50 மாணவர்கள் மற்றும் அப்பாசாமி லேன் சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 101 மாணவர்கள் என மொத்தம் 521 மாணவர்கள் 10 பேருந்துகளில் பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தினைப் பார்வையிட இன்று அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதன்படி, மேயர் ஆர்.பிரியா இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பட்ஜெட் அறிவிப்பின்படி முதற்கட்டமாக இன்று மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், மிகவும் சேதம் அடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க 50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.

மாமன்னன் திரைப்படம் தொடர்பான கேள்விக்கு, "திமுக கடைப்பிடிக்கும் சமூகநீதி கொள்கைதான் மாமன்னன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களில் பெண்கள் தான் பொறுப்புகளில் உள்ளனர். கட்சியில் இதுவரை நான் ஏற்றத் தாழ்வை எதிர்கொண்டதில்லை. திமுகவில் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை" என்று தெரிவித்தார்.

மழை நீர் வடிகால் தொடர்பான கேள்விக்கு, "மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15ம் தேதிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததார்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் அபராதம் விதிக்கப்படும். தூர் வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம்" என பதிலளித்தார்.

SCROLL FOR NEXT