மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 142 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 226 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 3-ம் தேதி இரவு முதல் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் பாசன நீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து நேற்று காலை 6 மணி முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 84.34 அடியாகவும், நீர் இருப்பு 46.41 டிஎம்சியாகவும் இருந்தது.