தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த நாகப்பட்டினம் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன், துறை செயலர் ஏ.மங்கத்ராம் சர்மா, பல்கலை. துணைவேந்தர் கோ.சுகுமார். படம்: ம.பிரபு 
தமிழகம்

மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தேவை: மாணவர்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் உருவாக்க இளைஞர்கள், மாணவர்கள் முன்வர வேண்டும் என்றுமத்திய இணை அமைச்சர்எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் 22 பிஎச்.டி. உட்பட 383 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 349 பேர் நேரடியாகவும், 34 பேர் தபால் மூலமும் பட்டங்களைப் பெற்றனர். மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 14 பேருக்கு தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

மீன்வள தொழிலில் 2.8 கோடி பேர்: விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: மீன் உணவுகளில் அதிகபுரதச்சத்து உள்ளதால் உலகளவில் வரவேற்பு உள்ளது. இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகளவிலான மீன் உணவுத் தேவையில் 8 சதவீதத்தை இந்தியாபூர்த்தி செய்கிறது. மீன் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மனிதவளம் சிறப்பாக இருப்பதால்தான் பல்வேறு நாடுகளிலும் நாம் சிறப்பான பதவிகளைப் பிடித்து வருகிறோம். அதைஅடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவே தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மீன்வளத் துறை வளர்ச்சிக்காக ரூ.38,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீன்வள கட்டமைப்பு வசதி திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘வரும் கல்வியாண்டில் இருந்து மீன் வளப் பல்கலைக்கழகத்தில், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு 10 பிரிவுகளின் கீழ் பல்வேறு பெயர்களில் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். இதற்கான நிதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்கலை. துணைவேந்தர் கோ.சுகுமார், பதிவாளர் நா.பெலிக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

14 விருதுகள் பெற்ற மாணவி: இந்த விழாவில் இளநிலை படிப்பில் பல்வேறு பாடங்களில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெ.ஐஸ்வர்யா 14 விருதுகளைப் பெற்று அசத்தினார். முதுநிலை படிப்பில் மாணவி கமலி 6 விருதுகளைப் பெற்றார். 14 விருதுகள் பெற்ற மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை மீனவராவார்.

இதுகுறித்து மாணவி ஐஸ்வர்யா கூறும்போது, ‘‘விருதுகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த விருதுகளை பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். உயர்கல்வியை முடித்து பேராசிரியராகப் பணிபுரிய விரும்புகிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT