தமிழகம்

சென்னையில் நத்தை வேகத்தில் நடைபெறும் வரன்முறைப்படுத்தல் பணி: 21 ஆயிரம் விதிமீறல் கட்டிடங்களில் 25 மட்டுமே விலக்கு பெற்றுள்ளன

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் 1999-ம் ஆண்டுக்கு முன்பு விதிமீறிக் கட்டப்பட்ட 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கட்டிடங் களில் 25 கட்டிடங்கள் மட்டுமே இதுவரை வரன்முறைப்படுத்தப் பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதி களுக்கு உட்பட்ட சென்னை பெரு நகரப் பகுதிகளில், விதிகளுக்கு மாறாகவும், பெறப்பட்ட திட்ட ஒப்புதல்களுக்கு மாறாகவும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள லாம் என்று தமிழக அரசு கடந்த 1999-ம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி, விதிமுறை மீறல் களுக்குத் தகுந்தபடி ஒரு கட் டணத்தை சிஎம்டிஏ நிர்ணயித்தது. அதனைச் செலுத்திவிட்டு, வரன் முறைப்படுத்திக் கொள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கட்டிட வரன்முறைப் படுத்தல் திட்டம் முறையே 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளிலும் நீட்டிக்கப்பட்டது. அதனால், மேலும் பல ஆயிரக்கணக்கான கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பித்தனர்.

ஆனால், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன் முறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப் பட்டது. இந்த வழக்கில் 2006-ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட வரன்முறைப் படுத்தல் திட்டம் செல்லாது என்றும், 1999-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட கட்டிடங்களை மட்டும் வரன்முறைப்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டது. இதனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவினை உயர் நீதிமன்றம் அமைத்தது. அதேநேரத்தில், குடியிருப்புக் கட்டிடங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறிய கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகின. ஆனால், அதுபோன்ற கட்டிடங்களை இடிப்பதிலிருந்து விலக்கு அளித்து, திமுக ஆட்சிக் காலத்தில் (2007) அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்டிடங்களை இடிக்காமல் சீல் வைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வந்தது. 2011-ம் ஆண்டு வரை இந்த அவசரச் சட்டம் நீட்டிக்கப்பட்டது. அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அவசரச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28,1999-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை மட்டும் வரன் முறைப்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வரன்முறைப்படுத்தல் பணி, நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதே வேகத்தில் போனால் இது முடிவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனத் தெரிகிறது.

இது குறித்து சிஎம்டிஏ வட்டாரங்கள், ‘தி இந்து’ நிருபரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கட்டிட வரன்முறைப்படுத்தல் திட்டத்தின்கீழ், வர்த்தகக் கட்டிடங்கள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தம் உள்ள 21 ஆயிரம் கட்டிடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரத்தையும் (சொத்து வரி ரசீது), தீயணைப்புத் துறையின் ஆட்சேபமின்மைச் சான்றினையும் கட்டிட உரிமையாளர்கள் தரவேண்டும். அதனை, உயர் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுவின் பார்வைக்கு வைத்து, அவர்கள் சம்மதித்தால் வரன்முறைப்படுத்தி வருகிறோம். இதுவரை, 21 ஆயிரம் கட்டிடங்களில் 25 கட்டிடங்களின் உரிமையாளர்கள் மட்டுமே உரிய ஆவணங்களைக் காட்டி பயன் பெற்றிருக்கின்றனர். பெரும்பாலானோர், தீ விபத்துத் தடுப்பு பாதுகாப்புக்கேற்ப கட்டிடங்களைக் கட்டாததாலும், உரிய தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததாலும், வரன்முறைப்படுத்தலுக்கு வராமல் உள்ளனர். இப்பணி எப்போது முடியும் என்று எங்களுக்கே தெரியவில்லை. இவற்றை முடித்த பிறகுதான், குடியிருப்புக் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தத் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இடைப்பட்ட ஆண்டுகளில் மேலும் பல ஆயிரம் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அவை எந்த கணக்கிலும் சேராமல் உள்ளன.

விதிமீறல்கள் தினமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஒரு லட்சம் விதிமீறல் கட்டிடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT