திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிக தலங்களான ரங்கம், திருவானைக்கா மற்றும் சமயபுரம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் வகையில் தமிழக அரசு ரூ.47.9 கோடி மதிப்பீட்டில் கட்டியுள்ள யாத்திரிகர் நிவாஸ் என்ற தங்கும் விடுதியை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், திருவானைக்காவில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அம்மன் தலங்களில் சிறப்புற்று விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகியவற்றுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
வெளியூர்களிலிருந்து இந்த தலங்களை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான அளவில் தங்கும் விடுதிகள் இந்த பகுதியில் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை போக்கும் வகையில் 6.40 ஏக்கர் பரப்பளவில் கொள்ளிடக்கரையில் உள்ள பஞ்சக்கரை சாலையில் யாத்திரிகர் நிவாஸ் கட்ட ஜூன் 2011-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து கட்டப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில் ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் அளவுக்கு வசதி கொண்டது. 18 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் ஒவ்வொன்றிலும் 4 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் முகப்பிலும் புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் குடும்பங்கள் தங்கும் வகையில் 6 குடில்கள், உணவகம், 100 இரு படுக்கை வசதி கொண்ட அறைகள், இரு சாப்பிடும் அறைகள், பாதுகாப்புப் பெட்டகங்கள், கழிவறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், சமையலறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முடி காணிக்கை அளிக்கும் அறைகள், கார் ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறைகள் உள்ளிட்டவைகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த தங்கும் விடுதியை ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அரசு சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி ரங்கத்தில் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ள யாத்திரிகர் நிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.