தமிழகம்

செமஸ்டர் தேர்வுகளைக் கூட உரிய நேரத்தில் நடத்தாத புதுச்சேரி பல்கலைக்கழகம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: செமஸ்டர் தேர்வுகளைக் கூட உரிய காலத்தில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நடத்தாமல் உள்ளது. இதனால் இளநிலை படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் 10 ஆயிரம் இளையோர் வாழ்வை கேள்விக்குறியாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புதுச்சேரியில் 7 அரசு கலைக்கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 3 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 14 கல்லூரிகளில் இறுதி ஆண்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் முடியவுள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதர மாநிலங்களில் முதுநிலை படிப்புகளில் சேர முடியாத நிலை உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் செமஸ்டர் தேர்வுகளை உரிய காலத்தில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நடத்தாததுதான் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

இது பற்றி புதுச்சேரி மாணவர்- பெற்றோர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் பாலா கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து கலை - அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் முறையாக கடந்த 10 ஆண்டுகளாக நடத்துவதில்லை. செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர், மே மாதங்களில் நடைபெற வேண்டும். புதுச்சேரியில் அவ்வாறு நடப்பதில்லை. கடந்த கல்வியாண்டு மே மாதம் முடிவடைந்தாலும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

தற்போது செமஸ்டர் 2, 4, 6 மற்றும் 8-க்கான தேர்வுபட்டியலை காலம் தாழ்த்தி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை இறுதி தொடங்கி, ஆகஸ்டில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் முடிந்து, தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இறுதியாண்டு படிக்கும் இளம் நிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் படிக்கும் இளநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

புதுச்சேரிக்கு வெளியே உள்ள தேசிய நிறுவனங்களிலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் , வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலும் நுழைவுத் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருக்கும் சூழலில், இங்கு மட்டும் இறுதி ஆண்டு தேர்வை நடத்தாததால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தவறான முடிவால் வேறு மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் முதுநிலை படிப்புகளில் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. ‘பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் மாதந்தோறும் ஊதியம் பெறுகின்றனர்.

ஆனால், அவர்கள் சரியான காலத்தில் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்’ என்ற கடமையைக் கூட செய்யாமல் பத்தாயிரம் மாணவர்கள் வாழ்வில் விளையாடுகின்றனர். பல்கலைக்கழக உயர்பொறுப்பில் உள்ள ஆளுநர் (தலைமை ரெக்டர்) இதில் தலையிட வேண்டும்.சரியான நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT