தமிழகம்

சாரல் மழைக்கே தாக்கு பிடிக்க முடியாத ராஜபாளையம் சாலைகள்

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் வழியாக செல்லும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குற்றாலத் துக்குச் செல்லும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடை பெற்றன. அதன் பின்பு அந்த பள்ளங்கள் மூடப்பட்டு கடந்த நவம்பரில் சிமென்ட் கான்கிரீட் மூலம் ஒட்டு போடப்பட்டது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலையில் ஒட்டு போடப்பட்ட இடங்களில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிட்டது.

சாலையின் இருபுறமும் மண் மேவி 40 அடி சாலை தற்போது 20 அடி சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் நகரில் நேரு சிலை முதல் சொக்கர் கோயில் வரை 2 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ராஜபாளையத்தை கடந்து செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக ராஜபாளையம் நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மிகவும் சிரமப்படுகிறோம். இந்நகருக்குள் 2 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல அரை மணி நேரத்துக்கு மேலாவதால், பலர் 30 கி.மீ. சுற்றி கோவில்பட்டி, சங்கரன்கோவில் வழியாக குற்றாலம் செல்கின்றனர். நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடித்தால்தான் இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT