தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: ஆளுநர் மாளிகைக்கு அரசு அனுப்பிய கோப்புகளுக்கான ஒப்புகை கடிதங்கள் வெளியிடு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை கடிதங்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கான இசைவு ஆணையையும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதலையும் விரைவாக வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி இருந்தார்.

இதுபற்றி ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், "கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன. கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில், விசாரணை அறிக்கையை மாநில அரசு அளிக்காததால் மேல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை கடிதங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 மற்றும் இந்தாண்டு மே மாதம் 15ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை கடிதங்கள் வெளியாகி உள்ளன.

இதில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு தொடர்பான கோப்பு ஆளுநருக்கு 12.9.2022 அன்று அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஒப்புகை கடிதமும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவை அடங்கிய கோப்புகள் ஆளுநருக்கு 15.5.2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டதன் ஒப்புகை கடிதமும் என 2 ஒப்புகை கடிதங்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT