தமிழகம்

வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்யாத சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும், ரூ.30 லட்சத்துக்கு மேலான விற்பனை ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்களுடன் பதிவு அலுவலர்களால், வருமான வரித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் இந்த விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வப்போது வருமான வரித் துறையால் நினைவூட்டல்கள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு பதிவேற்றம் செய்யத் தேவையான தகவல்களை, ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே, ஆவணதாரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத் துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான் எண் பெறப்படுகிறது.

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித் துறைக்கு வழங்கும் வகையில், பதிவுத் துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகம், திருவள்ளூர் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடந்த 4-ம் தேதி வந்த வருமான வரித் துறையினரிடம், 2017-2018-ம் நிதியாண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை சரிபார்க்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள், வருமான வரித் துறையினரால், அந்தந்த சார் பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். மேலும், உரிய காலத்துக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சார் பதிவாளர்களும் 61-ஏ விவரங்களை வருமான வரித் துறையின் இணையதளத்தில் உரியகாலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT