திருப்பூர்: பணி வரன்முறை உத்தரவு பெற விண்ணப்பித்தவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் ஸ்ரீதேவி.காதர்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2016-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார்.
2006 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் பணியாற்றியதற்கான பணி வரன்முறை உத்தரவு பெற வேண்டி, திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த பணி வரன்முறை உத்தரவை வழங்க வேண்டுமென்றால், ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா கூறினாராம்.
இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஸ்ரீதேவி புகார் அளித்தார்.அதன்பேரில், வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீதேவி மூலமாக அமுதாவிடம் நேற்று அளிக்க செய்தனர். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கையும், களவுமாக அமுதாவை பிடித்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார், பல மணி நேரம் அமுதாவிடம் விசாரணையில் ஈடுபட்டனர். தற்போது அமுதாவுக்கு 59 வயது ஆகும் நிலையில், இன்னும் ஓராண்டே பணிக்காலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.