சென்னை: பாஸ்போர்ட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையில் கூடுதல் டிஜிபியாகப் பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், முன்பு மதுரை மாநகர காவல் ஆணையராகப் பதவி வகித்தபோது, இலங்கையைச் சேர்ந்த பலருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்க உதவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது மனைவி சுனிதா டேவிட்சன் நடத்தும் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலமாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பாஸ்போர்ட்-களைப் பெற்றுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த முத்துராமன், பரமசிவம் ஆகியோரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முருககணேசன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து மதுரை க்யூ பிரிவு போலீஸார் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இந்த விசாரணையை தனிப் பிரிவு உளவுத்துறை ஐ.ஜி. மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வராகி என்பவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘காவல் அதிகாரி டேவிட்சனுக்கு எதிரான குற்றச்சாட்டை, க்யூ பிரிவு போலீஸார் மிக மெதுவாக விசாரித்து வருகின்றனர்.
இதனால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆண்டு ஜூலை 20-ல் தமிழக அரசுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நற்சான்றிதழ் வழங்கியிருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு வருவதால், இது தொடர்பாக சென்னையில் எப்படி வழக்குத் தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், ‘‘இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என்று, உயர் நீதிமன்றப் பதிவுத் துறை ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.