மதுரை: மதுரை பாண்டிக்கோயில் அருகே மேம்பாலத்தில் இரவில் எரியாத மின்விளக்குகளால் பயணிகள் அச்சமடைகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சந்திப்பு பகுதியில் வாகன போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, மேம்பாலம் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன்மூலம் ராமநாதபுரம், தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் வாகனங்களும் திருச்சி, மேலூர் பகுதியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு போகும் வாகனங்களும் மேம்பாலத்தை பயன்படுத்தி நெருக்கடியின்றி செல்கின்றனர்.
மாட்டுத்தாவணி பகுதியில் இருந்து சிவகங்கை, கருப்பாயூரணி நோக்கி போகும் வாகனங்களும், விரகனூர் சந்திப்பு பகுதியில் இருந்து மாட்டுத்தாவணி, பாண்டிக்கோயில், மேலமடை சந்திப்பிற்கு செல்லும் வாகனங்களும் சர்வீஸ் ரோடுகளை பயன்படுத்தி செல்கின்றன. இதனால் சிவகங்கை சந்திப்பு பகுதியில் சிக்னல் இன்றி வாகனங்கள் நிற்காமல் சென்று வருகின்றன.
இருப்பினும், இரவு நேரத்தில் அப்பகுதியில் மக்கள், வாகன ஓட்டிகள் திருட்டு பயமின்றி செல்வதற்கு மேம்பாலம், பாலத்திற்கு அடிப்பகுதியிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாண்டிக்கோயில் செல்லுமிடத்திலும், மேம்பாலத்திற்கு அருகிலும் உயர் கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாளாகவே மேம்பாலத்திற்கு மேல், கீழ் பகுதியிலும், கோபுர மின்விளக்குகளும் சரிவர எரியவில்லை. இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும், அதிகாலை வேளையிலும் சிவகங்கை சந்திப்பு மற்றும் மேம்பாலத்தில் வழிப்பறி போன்ற சம்பவம் நடக்க வாயப்புள்ளது என பொதுமக்கள், பெண்கள் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே மதுரையில் இருந்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி பணிக்கு செல்லும் செவிலியர்கள், ஊழியர்கள் சந்திப்பு பகுதியில் அதிகாலையில் பஸ்ஸுக்காக கார்த்திருக்கும்போது, வழிப்பறி நடக்குமோ என்ற பயத்துடன் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. இரவு, அதிகாலை நேரத்தில் மேம்பால மின்விளக்கு, கோபுர விளக்குகளை எரிய வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மேம்பால பகுதியில் மின்விளக்குகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. உடனே மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.