விழுப்புரம் அருகே சிறுவாலை கிராமத்தில் தாழ்ந்து அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பி இது. ‘ஸ்டே ஒயர்’ ஏற்கெனவே அறுந்து விழுந்து விட்டது. 
தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் அறுந்து விழும் மின் கம்பிகள் - மின்வாரியம் அலட்சியம்

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: சட்ட விரோத மின்வேலிகளைப் போலவே, திடீரென அறுந்து விழும் மின் கம்பிகளும் உயிர்களைக் காவு வாங்கத் தொடங்கி விட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 01.04.2022 முதல் 01.04.2023 வரை 29 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், 10 மின் விபத்துகள் ஏற்பட்டு மனிதர்களும், விலங்குகளும் இறந்துள்ளதாக மின் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் இறந்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. இது காவல்துறை வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம். இதுதவிர, ஊரகப் பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து காட்டு பன்றிகள் உள்ளிட்ட சிறு விலங்குகள் இறந்தது கணக்கில் அடங்காதது. மின் வாரிய உதவி செயற் பொறியாளர்களைக் கொண்டுகள ஆய்வு செய்து, பழமையான மின் கம்பிகள், பழுதடைந்த மின் பாதைகள், சாய்ந்த மின் கம்பங்கள், பழுதான இழுவை கம்பிகள், அகற்றப்பட வேண்டிய மரக்கிளைகள் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு பெற்றுள்ளது.

இந்த விவரங்கள் பெறப்படுவது இதில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கே. ஆனால், பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அண்மையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தில் நடைபெற்ற மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றபடி மேலே குறிப்பிட்ட 10 மின் விபத்துகளில் பெரிய அளவிலான நடவடிக்கை எதுவும் இல்லை.

குறிப்பிட்ட சிறுவாலை கிராமத்தில் விபத்து நடந்த பகுதியில் இருந்து சற்று தள்ளி, தற்போது மீண்டும் மின் கம்பியின் ‘ஸ்டே ஒயர்’ அறுந்து விழுந்து கிடக்கிறது. உடன் செல்லும் மின் கம்பிகள் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் என்ற நிலையில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மின் கம்பங்கள் பராமரிப்பு குறித்து தமிழ்நாடு மின்ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “மின்கம்பிகளை 10 வருடங்களுக்கு ஒருமுறை சோதித்து புதுப்பிக்க வேண்டும்; சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். இது மின்வாரியத்தின் விதிமுறை. ஆனால் அரசும், வாரியமும் இதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனாலேயே இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இங்கு பயன்பாட்டிலுள்ள மின்கம்பிகள் பெரும்பாலும் 20 வருடங்களுக்கு மேல் பழமையானவையே.

அரசு அண்மையில் அறிவித்த 1,50,000 மின் இணைப்புகளுக்கு பொருள்களை வழங்காததால், பழைய மின் கம்பிகளே பயன்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வாக மின் கம்பிகள் செல்லும் பகுதிகளுக்கு குழு அமைத்து வாரியம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இது மிக முக்கியம் ஆனால், மின் வாரியம் அதைச் செய்வதே இல்லை" என்று தெரிவித்தனர்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, . "10 வருடங்களுக்கு ஒருமுறை மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என விதிமுறைகள் கிடையாது. அனைத்து இணைப்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. துரதிஷ்டவசமாக விபத்துகள் நடந்து விடும். இந்தக் கம்பிகள் இயற்கையாகவே அறுந்து விழுந்ததுதான்” என்கின்றனர்.

SCROLL FOR NEXT