சென்னை: திமுக மற்றும் அதன் ‘பி’ டீமாக செயல்பட்டவர்களால் அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், ஆக. 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிட்டு, மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டார்.
தொடர்ந்து, மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்துவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: மதுரை மாநாடு, அடுத்த தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.இதற்காக, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, மலர்க் குழு, தீர்மானக் குழு, உணவுக் குழு, வரவேற்புக் குழு உள்ளிட்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1.60 கோடி உறுப்பினர்கள்: அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் பணி நடைபெறும். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு முன் பணி தொடங்கி, தற்போது வரை 1.60 கோடி பேர் சேர்ந்துள்ளனர்.
அதிமுகவை வீழ்த்த திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. சிலர் அதிமுகவை முடக்கலாம் என கனவு கண்டனர். திமுகவின் ‘பி’ டீமாக இருந்து அவர்கள் செயல்பட்டனர். கடந்த ஓராண்டில் பல விமர்சனங்களை சந்தித்தோம். மூன்று, நான்காக கட்சி உடைந்துவிட்டது என்றெல்லாம் விமர்சித்தார்கள்.
இரு பெரும் தலைவர்களின் அரசியல் பள்ளியில் பயின்றவர்கள் நாங்கள். அதிமுக உடையவும் இல்லை,சிதறவும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம். எதிரிகளின் திட்டங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்துள்ளோம்.
ஒன்றரை மாதத்தில் 1.60 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். குறுகிய காலத்தில் இவ்வளவு உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை. தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட,மகளிர் நிறைந்த ஒரே கட்சி அதிமுகதான். இரண்டு கோடி தொண்டர்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக, மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உறுப்பினர் சேர்க்கை மற்றும் பதிவைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 19-ம் தேதி மாலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டணி: தேர்தல் வரும்போது எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தெரிவிப்போம். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாக ஏற்கெனவே கூறிவிட்டோம். பாஜகவுடனான உறவையும் தெளிவுபடுத்தி விட்டோம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக் குமார், சி.வி.சண்முகம் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.