தமிழகம்

தனியார் கல்லூரி சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரம் - உரிமையாளர் உட்பட 3 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு; இருவர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், திட்ட மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை-பாலக்காடு சாலையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தின் நுழைவுவாயில் பகுதி, சுகுணாபுரம் மைல்கல் மலைப் பாதையில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரபாகா கண்ணையா(49), கோலி ஜெகநாதன்(35), நாகெல்லா சத்யம்(37), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஷ்கோஷ் (20) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பலத்த காயமடைந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பருன்கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிர்இழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸார் நடத்தியவிசாரணையில், முறையானபாதுகாப்பு வழிமுறைகளைப்பின்பற்றாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதால் விபத்து நேரிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கட்டுமான நிறுவன உரிமையாளர் னிவாசன், திட்ட மேலாளர் குனியமுத்தூர் அம்மன் சாலையைச் சேர்ந்த சாதிக் குல் அமீர்(40),பொறியாளர் மேட்டுப்பாளையம் அருணாச்சலம்(40) ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சாதிக் குல் அமீர், அருணாச்சலம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது, விசாரணையின் இறுதியில் தெரியவரும்" என்றனர்.

SCROLL FOR NEXT