புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆட்டோ, பேருந்து நிறுத்தம் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(47), உறையூரைச் சேர்ந்தவர் முரளி(33). ரவிக்குமார், தில்லை நகரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவு மேலாளராகவும், முரளி அதே வங்கியில் கார் கடன்பிரிவில் விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் வாடகைக் காரில் நேற்று முன்தினம் தென்காசிக்கு அலுவலக வேலையாகச் சென்றனர். திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த கணேஷ்குமார்(33) காரை ஓட்டியுள்ளார்.
தென்காசியில் வேலை முடிந்ததும், அவர்கள் மீண்டும் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தென்காசியைச் சேர்ந்த சுரேஷ்(32), முத்துகிருஷ்ணன்(31) ஆகியோரும் அவர்களுடன் வந்தனர்.
ஆட்டோ, பேருந்து நிறுத்தம்...: மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகேயுள்ள லஞ்சமேடு பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமை ஆட்டோவிலும், பின்னர் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்திலும் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கணேஷ்குமார், சுரேஷ், முத்துகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முரளி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து நேரிட்ட இடத்தை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேநேரில் பார்வையிட்டு, ஆய்வுசெய்தார். தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.