புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த 8 பேரிடம் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நேற்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
வேங்கை வயல் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், முதல் கட்டமாக வேங்கைவயல், முத்துக்காடு பகுதிகளைச் சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் கொடுத்திருந்த நிலையில், ஒரு காவலர் உட்பட 3 பேர் மட்டுமே ஆஜராகினர்.
அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதியுள்ள 8 பேர் இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் 8 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அண்மையில் மனுதாக்கல் செய்தனர்.
அதன்படி, 8 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, 3 பெண்கள் உட்பட 8 பேரிடம் இருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரியைக் கொண்டு சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக டி.என்.ஏ பரிசோதனைக்காக 21 பேரிடம் இருந்து ரத்த மாதிரி சேகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 148 பேரை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.