உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ.மணியரசன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:
உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்த பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக் குழுவை அமைக்காமல் காலம் கடத்தி வருகிறது. இதனால், இங்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. எனவே, விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை இணைத்து காவிரி உரிமை மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சார்பில் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள மத்திய உற்பத்திவரி அலுவலகத்தை திங்கள்கிழமை (ஜூலை 21) முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் கடை அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
கர்நாடகம் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு 10 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்துக்கு 34 டிஎம்சி தண்ணீரும் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், உபரியான நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்த 2 மாதங்களில் அளிக்கப்படவேண்டிய 44 டிஎம்சி தண்ணீரில் 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். உபரி தண்ணீர் போதாது உரிமை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார்.