தமிழகம்

மெட்ரோ ரயில் பணியால் அண்ணா சாலையில் இரண்டாவது முறையாக திடீர் பள்ளம்

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும்போது சனிக்கிழமை இரவு திடீரென 10 அடி அகலம், 2 அடி ஆழத்துக்கு பள்ளம் உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் அருகே சனிக்கிழமை இரவு நடுரோட்டில் திடீரென 10 அடி அகலம், 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாரானார்கள். மற்ற வாகன ஓட்டுநர்களையும் எச்சரித்து தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே அரசினர் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் நாலாபுறமும் தடுப்பு வைத்தனர். போக்குவரத்தும் சற்று திருப்பி விடப்பட்டது.

திடீர் பள்ளம் ஏற்பட்டபோது அந்த இடத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் எல்சிஐ கட்டிடம் அருகே உள்ள வர்த்தக நிறு வனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்காக ராட்சத டனல் போரிங் இயந்திரத்தைக் கொண்டு தரைக்கு அடியில் சுமார் 40 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை தோண்டும்போது மண்ணின் இறுக்கம் குறையும்.

அந்த நேரத்தில் சுரங்கப் பாதையின் மேல்பகுதி சற்று இறங்கலாம். இருந்தாலும், அப்பகுதியில் உள்ள கட்டிடங் களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளத்தைச் சரிசெய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.

இது, அண்ணா சாலையில் நடந்துள்ள இரண்டாவது சம்பவம் ஆகும். இதற்கு முன்பு அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு, விரிசலின் வழியே ரசாயன நீர் நுரையாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற் கெனவே மண்ணடியிலும், சிந்தா திரிப்பேட்டையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இது போன்ற சம்பவம், அண்ணா சாலையில் 2-வது முறையாக நடந்திருப்பது வாகன ஓட்டி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ”இச்சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் வாகனம் இருந் திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக உள்ளது.

இச்சம்பவம் இரவு நேரத்தில் நடந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படவில்லை. முந்தைய சம்பவமும் இரவு நேரத்தில் நடந்தது குறிப்பிடத் தக்கது.

இதுபோல மீண்டும் ஒரு முறை நடக்காமல் நெடுஞ்சாலைத் துறையும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT