தமிழகம்

தென்மேற்கு பருவமழை | சேலம், ஈரோடு, நாமக்கல்லில் இயல்பை விட மழை குறைவு; கிருஷ்ணகிரி, தருமபுரியில் அதிகம்

எஸ்.விஜயகுமார்

சேலம்: தென்மேற்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் இயல்பை விட குறைந்த அளவே மழையைப் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்தியாவில், தென்மேற்குப் பருவமழைக் காலம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலும் இருக்கும். தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலம் நீடித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடப்பு ஜூலை 5-ம் தேதி வரையிலான காலத்தில், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள், இயல்பை விட குறைவான அளவே மழையைப் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்ளில், இயல்பை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஜூன் 1-ம் தேதி ஜூலை 5-ம் தேதி வரையிலான காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 67.5 மிமீ., ஆகும். ஆனால், 62.4 மிமீ., அளவுக்கே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 8 சதவீதம் குறைவாகும். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் ஜூன் தொடங்கி, ஜூலை 5-ம் தேதி வரையிலான காலத்தின் இயல்பு மழையளவு 50.7 மிமீ., ஆகும். ஆனால், இந்த காலகட்டத்தில் 40.6 மிமீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 20 சதவீதம் குறைவாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு மழையளவு 46.0 மிமீ., ஆக இருக்கும் நிலையில், அங்கு 43.8 மிமீ., அளவுக்கே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 5 சதவீதம் குறைவான அளவாகும். இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயல்பு மழையளவு 52.2 மிமீ., ஆக இருக்கும் நிலையில், அங்கு 82.9 மிமீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது வரையிலான காலத்தில், இயல்பை விட, 59 சதவீதம் கூடுதலாக மழையைப் பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் இயல்பு மழையளவு 59.3 மிமீ., என்ற நிலையில், அங்கு 65.1 மிமீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. அங்கு இயல்பை விட, 10 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடிப்பதால், அடுத்து வரும் நாட்களில் சேலம், ஈரோடு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT