தமிழகம்

காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உட்பட்ட அறந்தாங்கி தனி வருவாய் கிராமமாக மாற்றப்படுமா?

க.ரமேஷ்

கடலுர்: காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்குட்பட்ட அறந்தாங்கி கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உட்பட்டது அறந்தாங்கி கிராமம். இங்கு சுமார் 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். முற்றிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைக் கொண்ட இக்கிராமத்தில் பிரதான தொழிலாக தேக்கு கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு உருவாக்கப்படும் இக்கன்றுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இக்கிராமத்தில் தனியார் உயர்நிலை பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. அறந்தாங்கி , சித்தமல்லி ஊராட்சிகள் கருணாகரநல்லூர் வருவாய் கிராமத்தின் கீழ் உள்ளது. அறந்தாங்கி தனி வருவாய் கிராமமாக இல்லாமல் கருணாகரநல்லூர் வருவாய் கிராமத்தில் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகம் கருணாகரநல்லூரில் உள்ளது.

சுமார் 3 கி.மீ தூரம் சென்று கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கும் நிலையில் அறந்தாங்கி கிராம மக்கள் உள்ளனர். தனி வருவாய் கிராமமாக அறிவித்தால் கிராம நிர்வாக அலுவலர் அறந்தாங்கி கிராமத்தில் இருப்பார், எளிதில் பொதுமக்கள் அணுக முடியும் தற்போதுள்ள நிலையில், மாணவர்கள் சான்றுகள் பெறுவதற்கு, பொதுமக்கள் அரசு வழங்கும் சலுகைகளை பெற முயல்வதற்கு கருணாகர நல்லூர் செல்ல வேண்டும்.

அங்கு செல்ல போதிய பேருந்து வசதியின்றி வீராணம் ஏரி கரை ஓரம் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இக்கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் தனி வருவாய் கிராமமாக அறந்தாங்கியை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதும், அதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்ந்து வருகிறது.

SCROLL FOR NEXT