தமிழகம்

4 ஆண்டுகளில் நக்சல் வன்முறை அதிகரிப்பு: விஜயகுமார் ஐபிஎஸ் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 4 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் வன்முறை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என உள்நாட்டு பாதுகாப்புக்கான முதன்மை ஆலோசகர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் லீட் இந்தியா-2020 சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அவர் `தி இந்து’ தமிழுக்கு அளித்த பேட்டி:

உள்நாட்டுப் பாதுகாப்பின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மாநில முதன்மைச் செயலாளர், காவல் துறை இயக்குநர்களுடன் இரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

நக்சலைட்டுகள் பாதிப்பு பகுதிகளுக்கான திட்டங்களை அதிகப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பலப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. கடந்த அரசு நக்சலைட்டுகளை ஒழிக்கப் பயன்படுத்திய சில முக்கிய திட்டங்களை வலிமைப்படுத்தவும், சாலை, தொலைத்தொடர்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இப்பிரச்சினையில் பாதுகாப்பை மட்டும் நாங்கள் கவனிக்கவில்லை. மற்ற கூறுகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

நக்சலைட்டுகளுடனான பேச்சுவார்த்தை எவ்வாறு உள்ளது?.

நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வது தொடர்பாக பெரிதாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆயுதங்களை கைவிட்டு வருபவர் களுக்கு புனர்வாழ்வு கொடுக்கும் திட்டத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலையைக் கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே?

அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை. உள்துறை அமைச்சரும் சொல்லவில்லை. நானும் அதைப்பற்றி சொல்லவில்லை. நீங்கள்தான் (ஊடகங்கள்) அவ்வாறு சொல்கிறீர்கள்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நக்சலைட்டுகள் பிரச்சினை தற்போது எவ்வாறு இருக்கிறது?:

நக்சலைட்டுகளின் வன்முறை தற்போது அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டு. ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தில்கூட வன்முறை குறைந்துள்ளது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் அவர்களது வன்முறை இரண்டரை மடங்கு அதிகமாகியுள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளை கணக்கிட்டால் 2005-ம் ஆண்டில் இருந்து குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதற்கு காரணமாக எதை நினைக்கிறீர்கள்?.

வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு திட்டங்கள்தான் காரணம். பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். மாநிலங்களில் பாதுகாப்பு படை, போலீஸ் பிரிவில் இருந்த 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாநில அரசுகளும் சிறந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT