கோவை தெப்பக்குளம் 1-வது வீதியில் நேற்று டெங்கு தடுப்புப் பணியை கண்காணித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப். 
தமிழகம்

கணபதி, பீளமேடு, செட்டி வீதி பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு: டெங்கு தடுப்பு பணிக்கு 1,000 பணியாளர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, வார்டுக்கு 10 பேர் வீதம் 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்காலமான ஜூன் முதல் டிசம்பர் வரை டெங்கு காய்ச்சல் பரவல் அதிகளவில் இருக்கும். இதையடுத்து, டெங்கு பரவல் தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும், தேவையற்ற தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ஆட்டு உரல்கள் போன்றவை அப்புறப்படுத்தப் படுகின்றன. தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன.

இது குறித்து, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘பருவமழை தொடங்கியுள்ளதால் பயன்படுத்தப்படாத பழைய பொருட்களில் மழை நீர் தேங்கி, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சியில் முன்பு ஒரு வார்டுக்கு 6 பேர் என 600 பேர் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முதல் ஒரு வார்டுக்கு 10 பேர் என 100 வார்டுக்கு ஆயிரம் பேர் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சுழற்சி முறையில் சென்று நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். வீடுகளில் காணப்படும் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவார்கள். வீட்டின் மொட்டை மாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் அதில் ‘அபேட்’ மருந்து ஊற்றுவார்கள்.

கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 28 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. அதேபோல், வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புகள் தான் இருந்தன. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் இல்லை.

மாநகராட்சி சார்பில் ‘ஹாட் ஸ்பாட்’ என எதுவும் வகைப்படுத்தப் படவில்லை. மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் கணபதி, பீளமேடு, செட்டி வீதி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பதிவாகி வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT