கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் - கோவை இடையிலான ரயில்வே சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜபல்பூர் - கோவை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 02198), வரும் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை வெள்ளிக் கிழமை தோறும் ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.10 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02197) வரும் 10-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, திங்கட்கிழமை தோறும் கோவையில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் ரயில் நிலையம் சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில்கள் பாலக்காடு, சொர்ணூர், மங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், “ஹரியானா மாநிலம் ஹிசார் - கோவை இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண் 22475) 5-ம் தேதி (இன்று) முதல் 26-ம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி தற்காலிகமாக இணைத்து இயக்கப்படும்.
கோவை - ஹிசார் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:22476) வரும் 8-ம் தேதி முதல் வரும் 29-ம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி தற்காலிகமாக இணைத்து இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.