சென்னை: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அதன் பெற்றோரிடம் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், குழந்தைக்கு சிகிச்சைஅளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து குழந்தையின் நிலை குறித்து அதன் பெற்றோரிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
ட்ரிப் ஊசியின் காரணமாக.. இதையடுத்து, விசாரணை அறிக்கையை மருத்துவர்கள் குழு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் குழந்தையின் தாய் அஜிஷாகூறும்போது, ‘‘என்னிடம் நடத்தப்பட்ட விசாரணை திருப்திகரமாக இருந்தது. குழந்தைக்கு கையில் போடப்பட்ட ட்ரிப் ஊசியின் காரணமாகத்தான் கை அழுகும் நிலை ஏற்பட்டது.
குழந்தையின் கை நிறம் மாறுவதைக் கவனித்தவுடனே செவிலியர்களிடம் தெரிவித்தேன். அப்போதே ஊசி அகற்றப்பட்டிருந்தால் என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. என் மகனுக்கு நடந்த அநீதி போல் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், எனது குழந்தையை குறைமாதத்தில் பிறந்த குழந்தை, பல குறைபாடுள்ள குழந்தை என்று திரும்ப திரும்ப சொல்கிறார். அதை கேட்டு உடைந்துவிட்டேன்.
குறைபாடுடைய குழந்தை என கூறும் அமைச்சர், என் குழந்தையை மாற்றுத்திறனாளியாக ஆக்கியிருப்பதற்கு என்ன பதில்சொல்வார். தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது’’ என்றார்.