ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழகம்

தமிழக பல்கலை.களில் அதிக எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் செனட் மற்றும் சிண்டிகேட்களில் ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளார். அதில், “பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில்தான் நடைபெறுகின்றன. துறையின் முதன்மைச் செயலாளர் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்காமல், தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேர்மையான முறையில் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மேலும், பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர் பணியிடங்களும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இந்தப் பதவிகள் அனைத்தும் கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பல ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தற்போதைய சூழல் மற்றும் தேவைக்கேற்ப புதிய பாடத்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்குட்பட்டு உடனடியாக இதை செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கருத்தும் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இது மாணவர்களை வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக மாற்ற உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT