தமிழகம்

நமக்கு நாமே திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.100 கோடி நிதி விடுவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நமக்கு நாமே திட்டத்தை இந்தாண்டுக்கு செயல்படுத்த ரூ.100 கோடி நிதி விடுவிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் பா.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை: ஊரக வளர்ச்சித்துறை ஆணையர், 2023-24-ம் ஆண்டில் ‘நமக்குநாமே’ திட்டத்தை செயல்படுத்தரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ரூ.100 கோடி நிதி மற்றும்இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனுமதிக்கும்படியும் அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, 2023-24-ம் ஆண்டுக்கு ‘நமக்குநாமே’ திட்டத்துக்காக ரூ.100 கோடிக்கு மட்டும் நிர்வாக ஒப்புதல் அளித்து, நிதி விடுவிக்கப்படுகிறது. இந்தநிதியை சென்னை நீங்கலான மாவட்டங்களுக்கு பெற்று விடுவிக்க ஊரக வளர்ச்சி ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

வழிகாட்டுதல்கள் வெளியீடு: இத்திட்டப்படி, அரசு சார்ந்த அனைத்து வகை பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளுக்கு கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சோதனைக்கூடங்கள், கழிப்பறைகள்,சைக்கிள் நிறுத்துமிடங்கள் கட்டுதல், பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்தல், புனரமைத் தல் பணி எடுக்கப்பட வேண்டும்.

சமூக நலக்கூடங்கள், சமையலறைகள், உணவறைகள் கட்டுதல், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டுதல், பொது இடங்கள், சாலை சந்திப்புகளில் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள்எடுக்கப்பட வேண்டும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்குதல், ஊரக நூலகங்கள்,சத்துணவு கூடங்கள், நியாயவிலைகடை கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் எடுக்கப்படலாம்.

அதேநேரம் சம்பந்தப்பட்ட நிலஉரிமையாளர் அனுமதியின்றி எந்தஒரு நிரந்தர கட்டுமானமும் அமைக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT