பிரபல ரவுடி 'கேட் ராஜேந்திரன்' செவ்வாய்க்கிழமை காலையில் 4 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கடந்த 1990 - 1998 கால கட்டங்களில் சென்னை போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் 'கேட் ராஜேந்திரன்'. வடசென்னை, துறைமுகம், சாராய வியாபாரம் ஆகிய மூன்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார். இவரது தந்தை கிருஷ்ணன் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பணியாற்றியதால் திருவொற்றியூர் ரயில்வே கேட் அருகில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இளம் வயதிலேயே ரவுடியிசத்தில் இறங்கிய ராஜேந்திரன் ரயில்வே கேட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் லாரி உட்பட பல வாகனங்களில் மாமூல் வசூலித்ததால் 'கேட் ராஜேந்திரன்' என்ற பெயர் கிடைத்தது.
இளமைத்துடிப்போடு திரிந்த ராஜேந்திரன் 55 வயதை கடந்த நிலையில், ரவுடிதனத்தை விட்டு விட்டு கடந்த 6 ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கலைஞர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பழைய வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் கடந்த மாதம் 3-ம் தேதி வெளியில் வந்தார்.
தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது இவரது வழக்கம். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலையிலும் நடைபயிற்சி சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் காலை டிபன் சாப்பிடுவதற்காக பெரியபாளையம் ரால்லபாடி பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு பார்சல் வாங்கி விட்டு அருகே உள்ள ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட முயன்றனர்.
அப்போது திடீரென ஒரு காரில் வந்த 4 பேர் கும்பல் கேட் ராஜேந்திரனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. பின் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியதில் மூளை சிதைந்தது. 24 இடங்களில் வெட்டு விழுந்ததில் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பெரிய பாளையம் காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் போலீஸார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் சிக்கினர்
கொலையாளிகள் தப்பிச் சென்ற காரின் எண்ணை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அனைத்து சாலைகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது புல்லரம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அந்த காரை மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்த மகேஷ் (23), இம்ரான் (24), திருப்பதி (30), கார் டிரைவர் அந்தோணிராஜா (31), அரக்கோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் டிஎஸ்பி சந்திரசேகர், ஆய்வாளர்கள் சீனிபாபு, நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு மேகலா என்ற மனைவியும், கண்ணன், கலைமணி என இரண்டு மகன்களும் உள்ளனர்.