ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தக்காளியை பார்வையிடும் பொதுமக்கள். 
தமிழகம்

ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை: உணவகங்களில் தக்காளி சாதம் தவிர்ப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனையாகும் நிலையில், உணவகங்களில், தக்காளி சாதம், சட்னி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறி சந்தைக்கு, தாளவாடி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழநி மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து, தினமும் 7,000 முதல் 10 ஆயிரம் பெட்டி வரை (ஒரு பெட்டி 25 கிலோ) தக்காளி வரத்தானது.

கடந்த மாத தொடக்கத்தில், கிலோ தக்காளி ரூ.30 வரை விற்கப்பட்ட நிலையில், மழை மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்து, தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரம் முதல் காய்கறிச் சந்தையில் கிலோ ரூ.100-க்கும் உழவர் சந்தையில் ரூ.80 வரையிலும் தக்காளி விற்பனையானது. இந்நிலையில் நேற்று தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்ததால் அதிகபட்சமாக கிலோ ரூ.130-க்கு விற்பனையானது.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ‘நேதாஜி காய்கறிச் சந்தைக்கு சீசன் காலங்களில் 10 ஆயிரம் பெட்டி வரை தக்காளி வரத்து இருக்கும். அப்போது கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனையாகும். சராசரியாக 3,000 பெட்டிகள் வரை தக்காளி வரத்து இருந்தால், ரூ.100-க்குள் விலை இருக்கும்.

ஆனால், இன்று (நேற்று) 600 பெட்டி தக்காளி மட்டுமே வரத்தாகியது. இதனால், தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.130-க்கு விற்பனையானது’ என்றனர். தக்காளி விலை உயர்வு காரணமாக ஈரோட்டில் உள்ள உணவகங்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்கள் வரத்து அதிகரிப்பு: ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே செயல்படும் மீன் மார்க்கெட்டுக்கு, ராமேசுவரம்,காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1,200 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் நேற்று ரூ.900-க்கு விற்பனையானது.

SCROLL FOR NEXT