தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுப்பது என்பன போன்ற விதிகள் தொடரக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் உள்ள ஒரு கிளப்பில் உயர் நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞர்களும் வேட்டி கட்டி ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் போகிறபோது, உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.
யார் வேட்டி கட்டிப்போனார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால், தமிழகத்தில் நடக்கின்ற ஒரு கிளப்பில் வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதியை ஏற்க முடியாது.
ஒரு கிளப்பில் உறுப்பினர்கள் ஆனபிறகு, அந்த கிளப் சட்டதிட்டம் அந்த உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும். ஆனால், அந்த கிளப்பில் உறுப்பினர்கள் அல்லாதவர்களை இந்த விதிகட்டுப்படுத்தாது. அதை விட இந்த கிளப்புகள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு, விதிகளை இதற்கென்று உள்ள அதிகாரியிடம் பதிவு செய்து நடப்பவை. இந்த விதிகளை சங்கங்கள் பதிவு சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் அந்த அதிகாரி வேட்டி கட்டி உள்ளே வரக்கூடாது என்ற விதி இருந்தால் அந்த விதியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உடை என்பது மனித நாகரிகத்தின் ஒர் அடையாளம். அது எந்த உடையாக இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை, கிளப் நிர்வாகம் வைத்துக் கொள்ளமுடியாது. இந்த நிகழ்ச்சி பலமுறை நடந்திருக்கிறது. இது இனிமேல் தொடர அனுமதிக்கூடாது என்று வற்புறுத்துகின்றேன்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.